கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் எலைட் குரூப் ஏ பிரிவு டெஸ்ட் போட்டி, கோவையில், தமிழ்நாடு - உத்தரப்பிரதேசம் அணிகள் இடையே நடந்து வருகிறது. கடந்த 16ம் தேதி துவங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 455 ரன் குவித்தது. பின்னர், 2ம் நாளில் முதல் இன்னிங்சை ஆடிய உத்தரப்பிரதேசம் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 3ம் நாளான நேற்று, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை உத்தரப்பிரதேசம் தொடர்ந்தது.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த துவக்க வீரர் அபிஷேக் கோஸ்வாமி 79 ரன்னில் அவுட்டானார். பின் வந்தோரில் ஆர்யன் ஜுயல் 43, கேப்டன் கரண் சர்மா 11, ஆராத்யா யாதவ் 4, சிவம் மாவி 54 ரன் எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இடையில் வந்த ரிங்கு சிங் அற்புதமாக ஆடி ஆட்டமிழக்காமல் 98 ரன்னுடன் களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் உத்தரப்பிரதேசம் 6 விக்கெட் இழந்து 339 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை உத்தரப்பிரதேசம் தொடர உள்ளது. ஒரு நாளே மீதம் உள்ளதால் இந்த போட்டி டிராவில் முடியும் சூழ்நிலை காணப்படுகிறது.


