தென்ஆப்பிரிக்கா தொடரில் புறக்கணிப்பு; ரஞ்சியில் சிறப்பாக ஆடியும் ஷமி தேர்வு செய்யப்படாதது ஏன்?.. கங்குலி காட்டம்
மும்பை: ரஞ்சி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடி உடல் தகுதியை நிரூபித்த பிறகும் இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ஏன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் ஷமி காயம் காரணமாக இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் உடல் தகுதியை நிரூபிக்கவில்லை என தேர்வு குழு முதலில் விளக்கம் அளித்தது. பின்னர் முழு உடல் தகுதியை எட்டிய ஷமி ரஞ்சிப் கோப்பையில் களமிறங்கி 3 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சூழலில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷமி தேர்வு செய்யப்படவில்லை.
இதுகுறித்து முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி கூறியதாவது: ஷமி அபாரமாக பந்துவீசி வருகிறார். அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். நடந்து முடிந்த ரஞ்சி தொடரில் அவர் பந்துவீசிய விதத்தை அனைவருமே பார்த்தோம். கண்டிப்பாக ஷமியின் ஆட்டத்தை தேர்வு குழுவினரும் கவனித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அணியில் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து அவரிடம் கண்டிப்பாக தெரிவித்திருக்க வேண்டும். தேர்வு குழுவில் நான் இருந்திருந்தால் ஷமியின் தற்போதைய உடல் தகுதி மற்றும் திறமையை கருத்தில் கொண்டு கண்டிப்பாக அவரை தேர்வு செய்வேன். ஆனால் இந்தியாவுக்காக அவர் மீண்டும் ஏன் விளையாட முடியாது, அவர் ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்ற காரணம் எனக்கு தெரியவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக செயல்பட்டது. இங்கு இந்தியாவுடன் மோத வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்கா மிகவும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே முடியும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சும் நன்றாக இருக்கிறது. கில், ஜெய்ஸ்வால், ராகுல், பந்த் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு கங்குலி கூறினார்.
