Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணிப்பேட்டையிலேயே இனி லேண்ட் ரோவர், ஜாகுவார் தயாரிப்பு ரூ.9,000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை கட்டுமான பணி தீவிரம்: வரும் ஜனவரியில் திறக்க திட்டம்; 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு

வடஆற்காடு மாவட்ட மக்கள் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். காரணம், வட ஆற்காடு மாவட்டமாக இருந்த வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் வேலை தேடி சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தோல் தொழிற்சாலைகள், ஷூ கம்பெனிகள் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை.

இதற்கிடையில் தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ராணிப்பேட்டை மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டத்தில் உள்ள ஓச்சேரி, பனப்பாக்கம், அகவலம், துறையூர், நெடும்புலி, மேலப்புலம், பெருவளயம், உளியநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, அகவலம், துறையூர், நெடும்புலி, பெருவளையம் ஆகிய 4 கிராமங்களில் இருந்து சிப்காட் திட்டத்திற்கு 1,213 ஏக்கர் இடம் கண்டறியப்பட்டது.

சிப்காட் தொழிற்பேட்டையில் 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, அவ்விடத்தில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலைக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இங்கு 470 ஏக்கர் பரப்பளவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் டாடா மோட்டார்ஸ் கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைத்து வருகிறது. இங்கு, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி கார் கம்பெனியான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொகுசு கார்களான லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் போன்றவற்றை இத்தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளது.

இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய உள்ள தொழிற்சாலையில் கார்களின் அனைத்து பாகங்களும் இங்கேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தயாரிக்கப்பட உள்ளது. இங்கு தயாரிக்கும் வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ராணிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

புதிய டாடா தொழிற்சாலை கட்டுமான பணிகளில், 2000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சிப்காட் வளாகத்தில் பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது. தற்போது, சிப்காட் வளாகத்தை சுற்றிலும் போக்குவரத்துக்காக பல வழித்தடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சிப்காட் நிர்வாக அலுவலக கட்டிடம் உட்பட ரூ.1.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிப்காட் முன்பகுதி வளைவு அமைத்தல், கம்பெனி பொருட்கள் இருப்பு வைக்கும் இடம், சிப்காட் மையப்பகுதியில் சுற்று வளைவு சாலை, நீர்த்தேக்க தொட்டிகள், சாலை அமையும் இடங்கள், மழைநீர் வடி கால்வாய்கள், கம்பெனிகளுக்கு மின்சாரம், குடிநீர் கொண்டு வரும் வழித்தடங்கள் பணிகளும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் வழியாக சென்னை- பெங்களூரு சாலை வரையில் சாலை அமைக்க இடங்களை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஜனவரி மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று சிப்காட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே சிப்காட் பகுதியில் 250 ஏக்கரில் ரூ.400 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைதொடங்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு தொழிற்சாலைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இளம்பெண்கள் என்று நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதனால் இளைஞர்கள், பொதுமக்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர். தமிழ்நாடு வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சியில் முன்னேறத்தொடங்கியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

* சிப்காட் தொழிற்பேட்டையில் 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு டாடா நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இங்கு தயாரிக்கும் வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

* இதே சிப்காட் பகுதியில் 250 ஏக்கரில் ரூ.400 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது.

* மேலும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளதால், ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இளம்பெண்கள் என்று நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.