Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணிப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து வந்தவர் கைது: புகார்கள் குவிவதால் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நிலங்களை அபகரித்து வந்த வேலு என்பவரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கம் அவலூர் காலனியை சேர்ந்தவர் கங்கன். இவர் கடந்த மார்ச் 26ம் தேதி காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், பெரும்புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் ஜெயராமன், வேலு ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் ஒன்றை காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளேன்.

ஆனால், இந்த புகார் சம்பந்தமாக இதுவரை எந்தவித முறையான விசாரணையும் நடைபெறவில்லை. இருவரும் பல நபர்களை கோடிக்கணக்கில் ஏமாற்றி நில அபகரிப்பு செய்துள்ளது எனக்கு தெரியவருகிறது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் போதெல்லாம் நீதிமன்றம் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என காவல் அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

என்னை போல் சென்னையை சேர்ந்த தணிகாசலம் என்பவரும் வேலு மற்றும் சக்திவேல் மீது அளித்த உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் பழனி என்பவரையும் ஏமாற்றியுள்ளனர். இவர்களால் ஏமாற்றப்பட்ட 2 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அதில் ஒருவர் ராஜூ. அவரது மனைவி விமலா, மகள் சந்தியா.

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் காவல் நிலையத்தில் ஜெயராமன் மற்றும் வேலு மீது புகார் அளித்துள்ளார். அவர்கள் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இருவரும் வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் வேலையை இழந்துள்ளார். எனவே தொடர்ந்து அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்றி நிலத்தை அபகரித்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் மீது விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ராணிப்பேட்டை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜெயராமன் மற்றும் வேலு ஆகியோர் இணைந்து விவசாயிகளை ஏமாற்றி அவர்களின் நிலங்களை அபகரித்து வந்தது தெரியவந்தது. மேலும், இதுபோல் 10 ஆண்டுகளில் கங்கன் நிலம் மற்றும் சென்னையை சேர்ந்த தணிகாசலம், விமலா உள்பட பலரிடம் மோசடியாக நிலங்களை அபகரித்து வந்தது விசாரணையில் உறுதியானது.

அதைதொடர்ந்து போலீசார் வேலு மற்றும் ஜெயராமன் மீது ஐபிசி 420, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அதிரடியாக வேலுவை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயராமனை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வேலு மீது பல்வேறு நில மோசடி புகார்கள் இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.