Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் வெற்றிக்கோப்பை

*அமைச்சர் ஆர்.காந்தி அறிமுகப்படுத்தினார்

ராணிப்பேட்டை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14வது சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை- 2025 போட்டிகள் சென்னை மற்றும் மதுரை மாநகரில் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை போட்டிகள் குறித்து தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அறிந்து கொள்ளும் வகையிலும் இப்போட்டிக்கான வெற்றிக்கோப்பை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமாக செல்லும் வகையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10ம் தேதி அன்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

தொடர்ந்து, ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பை நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தது.

இக்கோப்பையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் சந்திரகலா ஆகியோர் தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தம் அருகே எல்.எப்.சி.மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சி, வாலாஜா சிலம்பம் குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் உற்சாகத்துடன் வரவேற்று, ஊர்வலகமாக அம்மூர் தி ஜி.கே. உலகப் பள்ளி வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், அங்கு நடந்த அறிமுக நிகழ்ச்சியில் கோப்பை மற்றும் கோப்பையின் சின்னமான காங்கேயனை அமைச்சர் ஆர்.காந்தி அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, ஹாக்கி மட்டையால் பந்தை அடித்து போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் மற்றும் தி ஜி.கே. உலகப்பள்ளி மேலாண்மை இயக்குநர் வினோத் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மூர் தி ஜி.கே.உலகப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் கலைநிகழ்ச்சி, வாலாஜா சிலம்பம் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பி.எல்.டி.சிவா, ராணிப்பேட்டை மாவட்ட ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் வரலாற்றில் முதன்முறையாக 24 அணிகள் பங்குபெற உள்ளன. இந்த ஹாக்கி விளையாட்டு சர்வதேச அளவில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதையும், அனைவரையும் உள்ளடக்கிய அதன் தன்மையையும் பிரதிபலிக்கிறது.

சென்னையில் உள்ள புகழ் பெற்ற மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்திலும் மதுரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த மைதானத்திலும் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.இது விளையாட்டுத்துறைக்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் தமிழ்நாடு கொண்டுள்ள உறுதியை காட்டுகிறது. மேலும், பாரம்பரியமிக்க வலிமையான அணிகள் வளர்ந்து வரும் அணிகள் என அனைத்து நாடுகளும் இக்கோப்பைக்காக போட்டியிடவுள்ளன.

இது வெறும் போட்டி மட்டுமல்ல. இளம் திறமையாளர்களுக்கான ஒரு களமாகவும் அமைகிறது. அடுத்த தலைமுறை உலக ஹாக்கி நட்சத்திரங்களை வளர்த்திருப்பதிலும் ஹாக்கி விளையாட்டில் ஒரு முன்னணி சக்தியாக இந்தியாவின் இடத்தை வலுப்படுத்துவதிலும் இந்த ஜூனியர் உலகக்கோப்பை முக்கிய பங்காற்றுகிறது.