Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கப்பல் சேவை?: இந்தியா - இலங்கை அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

மும்பை:இந்தியா - இலங்கை இடையே ராமேஸ்வரம்-தலைமன்னார் வழித்தடத்தில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை தொடங்குவது குறித்து இருநாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா மற்றும் இலங்கை இடையே நாகப்பட்டினம் - காங்கேசன்துறை வழித்தடத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஏற்கனவே வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கடல் வழித்தடத்தில் மீண்டும் கப்பல் சேவையை தொடங்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த வழித்தடத்தில் கடந்த 1980ம் ஆண்டுகள் வரை கப்பல் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் சூழல் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த சேவையை புனரமைக்க கடந்த காலங்களில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை முழுமையாக வெற்றிபெறவில்லை. தற்போது இந்த திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் விதமாக, மும்பையில் நடைபெற்ற ‘இந்திய கடல்சார் வாரம் 2025’ நிகழ்ச்சியின்போது, இதுகுறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் இந்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அனுர கருணாதிலகே ஆகியோர் கலந்துகொண்டு விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த சேவையை தொடங்குவதற்கு இருபுறமும் உள்ள துறைமுகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இருநாட்டு மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் இந்த முயற்சி முக்கிய பங்காற்றும் என இருதரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை விரைவுபடுத்த இரு நாடுகளும் கூட்டாக உறுதியேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.