Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ராமேஸ்வரத்தில் இருந்து காஷ்மீருக்கு விரைவில் ‘அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்’: நிறைவேறுகிறது தெற்கு ரயில்வேயின் லட்சியத் திட்டம்

மானாமதுரை: இந்தியாவின் கடைக்கோடி எல்லையான ராமேஸ்வரத்தை, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவுடன் இணைக்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை விரைவில் அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. வடஇந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, காசி, புவனேஸ்வர், செகந்திராபாத் உள்ளிட்ட 12 நகரங்கள் வழியாக ராமேஸ்வரத்திற்கு வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் காஷ்மீருக்கு நேரடியாக ரயில்கள் இதுவரை இயக்கப்படவில்லை. வடமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு ராமேஸ்வரம் முக்கிய புனிதத் தலமாக இருப்பதால் இந்திய ரயில்வேயில் உள்ள வடக்கு ரயில்வே, வடமேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே, வடகிழக்கு ரயில்வே பிரிவுகள் ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக பாம்பன் பாலப்பணிகள் நடந்து வந்ததால் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்ேபாது புதிய பாம்பன் ரயில் பாலப்பணிகள் முடிந்து மின்சார ரயில் இன்ஜின் மூலம் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் ராமேஸ்வரம் ரயில்நிலையத்திற்கு வரும் புதிய ரயில்களுக்கான பராமரிப்பு பணிகளை செய்ய தேவையான பிட் லைன் பணிகள் முழுமையாக முடிவடையாமல் இருப்பதும், பராமரிப்பு ஊழியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாலும், ரயில் நிலையப் பணிகள் முடிவடையாமல் இருப்பதாலும் புதிய ரயில்களின் இயக்கம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் 272 கி.மீ தூரமுள்ள உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கடைசிப் பகுதியான செனாப் ரயில் பாலம் கடந்த 6ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் ராமேஸ்வரம் - காஷ்மீர் இடையே நேரடி ரயில் போக்குவரத்து துவக்க தெற்கு ரயில்வே முயற்சித்து வருகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘கன்னியாகுமரியிலிருந்து கத்ரா வரை இயக்கப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், 3,785 கிமீ தூரத்தைக் கடந்து, வைஷ்ணவ தேவி கோயில் யாத்ரீகர்களுக்கு சேவை செய்கிறது. அதேபோல இந்தியாவின் கடைக்கோடி தீபகற்பமான ராமேஸ்வரத்திலிருந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், பாரமுல்லாவிற்கு ரயில் இணைப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தெற்கு ரயில்வேயின் லட்சியத் திட்டமாகும். கடந்த ஜூன் மாதம் டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் இயக்கப்பட்டது. காஷ்மீரில் செனாப் பாலம் ரயில் ேபாக்குவரத்திற்கு திறக்கபட்டுள்ளதால் ராமேஸ்வரத்திலிருந்து அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை துவக்க ரயில்வே வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி காசியாபாத்தின் லோகோ ஷெட்டில் (வடக்கு ரயில்வே) இருந்து 4 மின் இன்ஜின்களை ராயபுரம் மின்சார லோகோ ஷெட்டுக்கு மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட இந்த இன்ஜின்கள் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே மின்பாதை பணிகள் முடிந்துள்ளதால், விரைவில் இந்த ரயில் ேசவை துவங்கப்படவுள்ளது’’ என்றனர்.

என்ன ஸ்பெஷல்?

2024ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், பெட்டிகள் அதிவேக புஷ்-புல் உள்ளமைப்பைக் கொண்டவை. மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. வந்தே பாரத் போன்ற அதே வசதியை ஏசி இல்லாமல் பயணிகளுக்கு வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 ஸ்லீப்பர் பெட்டிகள், 8 பொது பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் பெட்டிகள் உட்பட 22 பெட்டிகளைக் கொண்டுள்ளது. வந்தே பாரத் ரயில்களைப் போன்ற தானியங்கி கதவுகள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள், சொகுசான இருக்கைகள் மற்றும் பெர்த்கள், அவசர கால உதவி கருவிகள், உணவு, தொடர் விளக்கு அமைப்பு ஆகியவை இவற்றில் இருக்கும்.