ராமேஸ்வரத்தில் விமானநிலையம் 3 இடங்கள் தேர்வு: 700 ஏக்கரில் அமைகிறது, ஓராண்டுக்குள் பணிகள் துவங்க வாய்ப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரத்திற்கு பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் வரை வந்து செல்கின்றனர். இதுபோக தனுஷ்கோடி உள்ளிட்ட ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் ஆன்மீக சுற்றுலா மற்றும் கடல் சுற்றுலாத் தலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.
இதுபோக வணிகம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும், அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் வந்து செல்கின்றனர். 4 இடங்களில் ஏர்போர்ட் ஒன்றிய அரசு உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தஞ்சை, வேலூர், நெய்வேலி ஆகிய 4 மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க ரூ.36.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ராமேஸ்வரம் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என 2025-2026 நிதிநிலை அறிக்கையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் சட்டபேரவையில் அறிவித்தார். இதனையடுத்து விரைவில் விமான நிலையத்தை நிறுவுவதற்காக உரிய இடத்தை தேர்வு செய்து, இறுதி செய்ய தமிழக அரசு முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
700 ஏக்கர் நிலம் 50 முதல் 75 பேர் பயணிக்கக் கூடிய வகையில் சிறிய ரக விமானங்கள், 10 பேர் செல்லும் வகையில் ஹெலிகாப்டர்களுக்கான சிறிய விமான நிலையங்கள், ஹெலிபேடுகளை அமைக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்கள் இணைந்து ஒரு விமான சேவையை தரக்கூடிய ‘கோட் சி’ விமானங்களை கையாளக்கூடிய வகையிலான ஓடுபாதையுடன் கூடிய விமானம் நிலையம் அமைக்க 700 ஏக்கர் நிலம் தேவைப்படும்.
அதன் அடிப்படையில் விமான நிலையம் அமைக்க தேவையான நிலத்தை பாம்பன் பாலத்தை மையமாக வைத்து பாலத்திற்கு கிழக்கே தீவு பகுதியில் அமைந்துள்ள தங்கச்சிமடம் முதல் ராமேஸ்வரம் வரையிலான பகுதியில் ஒரு இடம் மற்றும் ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான பகுதியில் ஒரு இடம் என வனத்துறைக்கு சொந்தமான இரண்டு இடங்களும், பாலத்திற்கு மேற்கு பகுதியில் மண்டபம் முதல் உச்சிப்புளி வரையிலான ராமநாதபுரம் எல்லை பகுதியில் ஒரு இடம் என மூன்று இடங்களை கண்டறிந்து தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அறிக்கை அனுப்ப தீவிரம் இந்த இடத்திற்குரிய அனைத்து வகையான ஆவணங்களின் விரிவான அறிக்கையை தமிழக அரசு, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு அறிக்கையாக அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதன்பிறகு அந்த ஆணையம் தேர்வு செய்யப்பட்டுள்ள தளத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்தும், சுற்றியுள்ள கட்டிடங்கள், டவர்கள், மரங்கள் என சுற்றுப்புற உயரத்தை ஆய்வு செய்தும், அரசால் முன்மொழியப்பட்ட தளங்களில் விமான நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தடை வரம்பு மேற்பரப்புகள் கணக்கெடுப்பு, மண் உறுதித்தன்மை என அனைத்து சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க வாய்ப்புள்ளது.
அதன்பிறகு விமான நிலைய ஆணையின் சாத்தியக்கூறு அறிக்கையின்படி அடுத்த 6 மாதம் முதல் ஓராண்டிற்குள் தமிழக அரசு அந்த குறிப்பிட்ட இடத்தை தயார் செய்து தரும். எனவே அதிகபட்சம் ஓராண்டிற்குள் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ராமேஸ்வரத்திற்கு விமானத்தில் வர விரும்புபவர்கள் மதுரை அல்லது திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து சுமார் 3 முதல் 4 மணிநேரம் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.
ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைந்தால் வடக்கே புனிதத் தலமாக விளங்கும் காசி வளர்ச்சியடைந்தது போன்று தெற்கே ராமேஸ்வரமும் வளர்ச்சியடையும். இதுபோக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும். மாவட்டத்தில் கடல்சார் உணவு மற்றும் உற்பத்தி பொருள், வேளாண், பனை, தென்னை உற்பத்தி பொருட்களால் ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்படும்.
இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வணிக ரீதியில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், தொழில் வளர்ச்சி அடையும். பிராந்தியத்தின் உள்ளூர் பொருளாதார முன்னேற்றத்திற்கு முழு உந்து சக்தியாக விளங்கும்’’ என்றார்.
* உச்சிப்புளியை விரிவாக்கலாம்
உச்சிப்புளி அருகே ஐஎன்எஸ் பருந்து தளம் எனப்படும் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானதளம் உள்ளது. இது பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு விமான தளமாக இருந்து தற்போது கடற்படை விமான தளமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது போக ஹெலிபேடும் உள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் விமானநிலையம் அமைக்க 700 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டாலும், விமான நிலையம் அமைக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்து சாத்திய கூறுகளின்படி அந்த இடங்கள் தேர்வு ஆகுமா என்ற சந்தேகம் உள்ளது.
இதனால் ஒன்றிய அரசு மற்றும் இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்தால், தற்போது உள்ள உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து பாதுகாக்கப்பட்ட பகுதியிலேயே தனியாக கூடுதலாக நிலத்தை ஒதுக்கி ராமேஸ்வரம் விமானநிலையம் அமைக்க முடியும் என பொதுவான கருத்து நிலவுகிறது.