ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக இதுவரை ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு 5 இடங்களை தேர்வு செய்து நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடங்கியது.
இந்த ஐந்து இடங்களிலிருந்து மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையம் சாத்தியக்கூறு அறிக்கை ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அடுத்த ஆண்டுக்குள் ஒரு இடத்தை அரசு தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க சுமார் 700 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஒரு ஓடுபாதையுடன், கோட் சி விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட விமான நிலையத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.