Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுதந்திர போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை: சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாட்சியாரின் 108ஆவது பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் தென் ஆற்காடு மாவட்டம், கடலூரில் 1918ம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாள் சிவசிதம்பரம் படையாட்சி ரெத்தினம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் நகராட்சியில் தமது 60 ஆண்டுகள் பொதுவாழ்வில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர். இரண்டு முறை மேலவை உறுப்பினர். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசின் அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார்.

இராமசாமி படையாட்சியார் அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை மாநகரின் நுழைவாயிலான கிண்டியில் இராமசாமி படையாட்சியார் அவர்களின் கம்பீரச் சிலையை நிறுவி 21.2.2001 அன்று திறந்து வைத்தார்கள். மேலும், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 16 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விடுதலை போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியாரின் 108ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.