Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்து அறநிலையத்துறை பதிப்பகத்தின் 'இராமானுஜர்' என்ற நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “இராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவு வாயிலாக நூலாக்கம் செய்யப்பட்ட “இராமானுஜர்“ எனும் நூலினை வெளியிட்டார். இந்து சமய அறநிலையத் துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

மேலும், அரிய பக்தி நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்திடும் வகையில் புதிதாக பதிப்பகப் பிரிவு தொடங்கப்பட்டு, இரண்டு கட்டங்களாக 216 அரிய பக்தி நூல்கள் வெளியிடப்பட்டன. வைணவ சமய முன்னோடியாக திகழ்ந்த இராமானுஜர், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி, மேலக்கோட்டை, திருநாராயணபுரம் போன்ற திவ்ய தேசங்களில் வாழ்ந்து ஆன்மிகப் பணிகளையும், சமய சீர்திருத்தங்களையும் செய்திட்ட சமய முன்னோடியாவார். மேலும், வைணவத்தை வளர்க்க விசிஷ்டாத்வைதம் என்ற கோட்பாட்டையும், திருக்கோயில் வழிபாட்டுக் கோட்பாடுகளையும் உருவாக்கியதோடு அன்றாட பூசை நடைமுறைகள் குறித்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வகுத்தளித்து சிறப்பு சேர்த்துள்ளார்.

கலைஞர், இராமானுஜரின் வரலாற்றையும், இந்து மதத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக் கூறும் விதமாக “இராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சித் தொடரினை எழுதினார்கள். இத்தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் 433 அத்தியாயங்களாக ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பான இராமானுஜரின் வரலாற்றை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவு “இராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்” எனும் தலைப்பில் நூலாக்கம் செய்துள்ளது.

இந்நூலினை முதலமைச்சர் வெளியிட, இந்துசமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி. சிவம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, ஆழ்வார்திருநகரி, எம்பெருமானார் ஜீயர் மடம், ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ரெங்கராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீஎம்பார் ஜீயர் மடம், ஸ்ரீஸ்ரீஸ்ரீ அப்பன் உலகாரிய இராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஜீயர் மடம், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், “இராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்” தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர் குட்டி பத்மினி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.