எட்டயபுரம் : தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின் பேரில் ராமனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மகிழ் முற்றம் திட்டம் தொடங்கப்பட்டது.மாணவர்களின் தலைமைப் பண்பை ஊக்குவிக்கும் வகையில் மகிழ் முற்றம் மாணவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் குழுவாக இணைந்து செயல்படுதல், இனம் மொழி மதத்தால் உள்ள வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக இருத்தல் போன்ற நற்பண்புகளை உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. குழுத் தலைவர்களாக மாணவர்கள் சுவாதி, சத்தியா, அய்யனார், தர்ஷினிமுத்து மற்றும் கிஷோர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் சேர்ந்து தேச ஒற்றுமை சகோதரத்துவத்தை வளர்க்க பாடுபடுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர் இப்ராஹிம், இடைநிலை ஆசிரியர் இந்திரா பேசினர்.