Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமநாதபுரம், சிவகங்கையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க வழங்கப்பட்ட சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க வழங்கப்பட்ட சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் னிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

"ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒன்றிய அரசின் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு (ஒஎன்ஜிசி) நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்கத் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதியை அளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கின்றது.

வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, சுற்றுச்சூல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் 2020ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி அவசியமில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை. இதனடிப்படையில்தான் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு 11.03.2025 அன்று இச்சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.

வழக்கமாக ஒன்றிய அரசின் புதிய பரிவாஸ் (PARIVESH) தளத்தில் இந்த அனுமதி ஆவணத்தைப் பதிவேற்றம் செய்யாமல் யாரும் அதிகம் பயன்படுத்தாத பழைய சுற்றுச்சூழல் அனுமதிக்கான தளத்தில் (environmentclearance.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் காவிரி வடிநிலம் விவசாயிகளைக் கண்ணை இமை காப்பதுபோல காப்போம் என்றும் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கூற்றுக்கு மாறாக இப்போது புதிய ஆய்வுக் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வேளாண் மக்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம், உழவர் நிலங்களுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் தீவிரப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மண் மற்றும் நீரின் தன்மைகளை மீட்க முடியாத அளவில் பாழ்படுத்தும். 2020 ஆம் ஆண்டின் காவிரி வடிநிலம் பாதுகாப்பு சட்டம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்ற பகுதிகளுக்குச் சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தச் சட்டத்தை மீறி, ஓஎன்ஜிசி இப்படி புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கான செயல்முறை தவறானதாகும்.

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் திமுக அரசு நியமித்த நிபுணர் குழு 2022 ஆம் ஆண்டு, ஹைட்ரோகார்பன் கிணறுகள் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் மாசு விளைவிக்கும் என அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கையை உடனே வெளியிட்டு, அதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு ரத்து செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எரிபொருள் ஆராய்ச்சி உ ரிமம் Petroleum Exploration License (PEL) அனுமதி வழங்கக்கூடாது. பேராசிரியர் சுல்தான் இஸ் மாயில் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே செயல்படும் ஹைட்ரோகார்பன் கிணறுகளின் செயல்பாடுகளையும் முடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.