Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு; திருச்சியில் பிரபல திரையரங்கில் சதி திட்டம்? உரிமையாளர், பணியாளர்களிடம் டிஐஜி 5 மணி நேரம் விசாரணை

திருச்சி: திமுக முதன்மை செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்கு வெளியே சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுபடி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார், தஞ்சாவூர் எஸ்பி ராஜாராம் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது. அதன்படி விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் நேற்றுமுன்தினம் இரவு திருச்சி பாலக்கரையில் உள்ள பிரபல தியேட்டருக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அங்கு தியேட்டரின் உரிமையாளர் மற்றும் தியேட்டரில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. ராமஜெயம் கொலை தொடர்பாக இந்த தியேட்டரில் சதி திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. 5 மணி விசாரணைக்கு பின், டிஐஜி மற்றும் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

* யார் அந்த அரசியல் புள்ளி?

ராமஜெயம் கொலை நடந்த காலகட்டத்தில், திருச்சி பாலக்கரையில் உள்ள அந்த தியேட்டர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் புள்ளி ஒருவருக்கு சொந்தமாக இருந்துள்ளது. இவர், இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ‘முக்கிய பெண்மணியின்’ உறவினராம். திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடி ஒருவர், கடந்த காலங்களில் அரசியலில் பவர் புல்லாக இருந்த நபரின் ஆதரவாளராக செயல்பட்டு வந்துள்ளார்.

தற்போது, அந்த ரவுடி கப்சிப் என உள்ளார். ராமஜெயம் கொலை வழக்கு காலத்தில் அந்த ரவுடி திருச்சியில் உள்ள திரையரங்களில் சதித்திட்டம் தீட்டினாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், பிரபல சினிமா குழுமத்தின் தியேட்டர்களில் டிஐஜி வருண்குமார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.