சென்னை: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமீபகாலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் மருத்துவக் குழுவினர் அவருக்கு தொடர்ந்து பரிசோதனை செய்து வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவமனைக்கு சென்ற அன்புமணி, தந்தை ராமதாசின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:ராமதாசுக்கு ஆஞ்ஜியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையில் ரத்த குழாய் நன்றாக இருக்கிறது என தெரியவந்துள்ளது. பயப்படுவதற்கு எதுவுமில்லை. அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று இதய மருத்துவ நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலும், அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்கின்ற அந்த மாத்திரைகளை எடுக்க வேண்டும். மற்றபடி பயப்படுவதற்கு எதுவுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ராமதாஸ் ஐ.சி.யூ.வில் (தீவிர சிகிச்சைப் பிரிவு) இருக்கிறார். அதனால், அவரை பார்க்க முடியவில்லை.