மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ராமதாசின் பார்வையாளர் சந்திப்பு 12ம் தேதி வரை ரத்து: பாமக தலைமை அறிவிப்பு
திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாசின் பார்வையாளர் சந்திப்பு வருகிற 12ம்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக பாமக தலைமை நிலையம் அறிவித்துள்ளது. இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, ராமதாசை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், சீமான், கமல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். நேற்று முன்தினம் மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ராமதாஸ், அன்றிரவே திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். அங்கு டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி யாரையும் சந்திக்காமல் ஓய்வெடுத்து வருகிறார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்தேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு முழு இதயஅறுவை சிகிச்சை (Open Heart Surgery) செய்யப்பட்டிருந்ததால் சிறப்பு மருத்துவர்கள் இதய பரிசோதனை ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டுமென தெரிவித்து ஆஞ்சியோ கிராம் சிகிச்சை அளித்தார்கள். ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்குப் பிறகு உடல் நலமாக உள்ளேன். சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நேரத்தில் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னோடிகள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் நேரில் வருகை தந்தும், கைபேசியிலும் உடல்நலம் விசாரித்து முழு நலம்பெற வாழ்த்து தெரிவித்தார்கள்.
என்மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டுள்ள எனது உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்கள் குடும்பத்தோடு பூரண குணமடைய துடித்து கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார். இதேபோல் பாமக தலைமை நிலையம் (தைலாபுரம் தோட்டம்) வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி வருகிற 12ம்தேதி வரை ஒய்ெவடுக்க உள்ளார். எனவே ராமதாசின் பார்வையாளர் சந்திப்பு 12ம்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. வருகின்ற 13ம்தேதி (திங்கள்) முதல் வழக்கம்போல் தினமும் காலை 10 முதல் 12 மணி வரை நேரடியாக சந்திக்கலாம்’ என்று தெரிவித்து உள்ளது.