திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், ராமதாஸ் ஆதரவு தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளருமான ம.க.ஸ்டாலின்(55), பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது புகுந்து கடந்த 5ம் தேதி 7 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றனர். இதில் ஸ்டாலின், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில், வெடிகுண்டு தயாரித்து கொடுத்த லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய மகேஷ், மருதுபாண்டி, சேரன், சஞ்சய் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவிடைமருதூரை சேர்ந்த ஆகாஷ் (எ) ஹரிஹரன் (20), மகாலிங்கம் (23), கும்பகோணம் பாணாதுறையை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் திட்டமிட்டு இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. முக்கிய குற்றவாளிகளான அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று சரணடைந்தனர்.