திண்டிவனம்: தைலாபுரம் ேதாட்டத்தில் இன்று நடந்த வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டத்தில் தனது தலைமையிலான பாமகவுக்கு அங்கீகாரம் சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டை நாடுவது குறித்து நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். பாமகவில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரு அணியினரும் போட்டி கூட்டங்கள் நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். தங்களுக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இருவரும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று (15ம் தேதி) காலை பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கோபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முக்கிய நிர்வாகிகள் அன்புமணி ஆதரவாளர்கள், பாமகவினர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக புகார்கள் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் சேலத்தில் அருள் எம்எல்ஏ மீது நடந்த தாக்குதல் மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாமகவிரை அன்புமணி ஆதரவாளர்கள் தாக்கி வருவதாக புகார்கள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டால் அதை சட்ட ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டுமே யாரும் திருப்பி தாக்க கூடாது.
அன்புமணி ஆதரவாளர்களால் பாமகவினர் தாக்குதலுக்கு உள்ளானால் சமூக நீதி பேரவையினர் அவர்களை உடனடியாக தொடர்புகொண்டு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் நாம் பொறுமையாகயும் சாதுர்யமாகவும் இந்த பிரச்னையை கையாள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தனது தலைமையிலான பாமகவை அங்கீகரிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தேர்தல் கமிஷனில் 2 முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் உச்சநீதிமன்றத்தை நாடுவது சம்பந்தமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மஹாலில் வரும் 18ம் தேதி பாமக, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. மறுநாள் 19ம் தேதி இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ராமதாஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.


