Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகன் அன்புமணிக்கு எதிராக இன்னொரு வாரிசு மகளை தீவிர அரசியலில் களமிறக்கும் ராமதாஸ்: முதல் நிகழ்ச்சியே தடங்கலால் அப்செட்

திண்டிவனம்: பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இருவரும் கட்சியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பாமகவில் அன்புமணிக்கு பதிலாக மூத்த மகள் காந்தியை ராமதாஸ் முன்னிலைப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் 10ம் தேதி பூம்புகாரில் நடந்த வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் காந்தியை முதல் தீர்மானத்தை படிக்க வைத்து கட்சிக்காரர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து, கடந்த 17ம் தேதி பட்டானூரில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் தனக்கு பக்கத்தில் உட்காரவைத்து முக்கியத்துவம் கொடுத்தார் ராமதாஸ். இந்த பொதுக்குழுகூட்டத்தில் தான் பாமகவில் எட்டு பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைத்து ராமதாசிடம் அறிக்கை அளித்தது.

இதன் பின்னர் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தைலாபுரத்தில் கடந்த 18ம் தேதி கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்துக்கு பின் அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. பல்வேறு கட்ட அணிகளுடன் ஆலோசனை நடத்திய ராமதாஸ், வரும் 10ம் தேதிக்குள் விளக்க கடிதத்துக்கு பதில் அனுப்ப காலக்கெடு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக காந்தியை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் பாமகவில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2ம் தேதி தைலாபுரத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காந்தி முதல் முறையாக கலந்து கொண்டார். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்து கொள்வதில் மாவட்ட செயலாளர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

மேலும் அவரை தங்கள் தொகுதிக்கு வரும்படி பலரும் அழைப்பும் விடுத்தார்கள். தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ளுமாறு காந்தியை அழைத்தார். தனது தீவிர ஆதரவாளரான ம.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் முதல் அடியை எடுத்து வைத்து அரசியலை தொடர ராமதாசும் பச்சைகொடி காட்டினார். அந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. காந்தி கலந்து கொள்ளும் முதல் அரசியல் நிகழ்ச்சி என்பதால் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தார்கள்.

இந்நிலையில் ம.க.ஸ்டாலினை குண்டு வீசி கொலை செய்யும் முயற்சி நடந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. காந்தி அரசியலில் எடுத்து வைத்த முதல் அடியே தடங்கலாக அமைந்ததை நினைத்து கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். ஆடுதுறையில் நடத்த இருந்த கூட்டம் ரத்தானாலும் இன்னொரு நாள் நடக்கும். அக்காவின் அரசியல் ஆட்டம் தொடரும் என்கிறார்கள் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள்.