திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே கடும் மோதல் காரணமாக பாமக 2 அணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொல்ல அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதையடுத்து ராமதாசுக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அவரது வீட்டு வாசலில் மெட்டல் டிடெக்டர் வசதியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என டி.ஜி.பி. அலுவலகத்தில் பாமக ராமதாஸ் தரப்பினர் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை அவரது இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் மற்றும் மோப்பநாய் மூலம் 2 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடத்தினர்.
இதில், வெடிகுண்டு ஏதும் இல்லை எனவும் அந்த மிரட்டல் போலியானது என்றும் தெரியவந்ததையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். மேலும், தோட்டத்தினுள் இருந்து அனுமதி அளித்த பிறகே அங்கு வருபவர்கள் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்து வருகின்றனர். இதேபோல், சென்னை தியாகராய நகரில் அன்புமணி கட்டுப்பாட்டில் இருக்கும் பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் சிக்காததால் மிரட்டல் புரளி என தெரியவந்தது.