Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமதாஸ் மட்டுமே நிறுவனர், தலைவர் பாமக அலுவலகத்தின் முகவரியை மாற்றி மோசடி: அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது; கவுரவ தலைவர் ஜி.கே.மணி கடும் தாக்கு

திண்டிவனம்: பாமகவின் முகவரியை மாற்றம் செய்து மோசடி செய்துள்ளதாகவும், ராமதாஸ் மட்டுமே நிறுவனர், தலைவர் என்றும், அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமக கவுரவ தலைவர் ஜி.ேக.மணி நேற்று தைலாபுரத்தில் அளித்த பேட்டி: இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு தைலாபுரத்தில் நாளை (இன்று) ராமதாஸ் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளார். தேர்தல் ஆணையத்தின் கடிதம் அரசியலை திசை திருப்பவும் மக்களை நம்ப வைக்கவும் காட்டப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் திலக் தெரு என முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாமகவின் நிரந்தரமான முகவரி 63, நாட்டு முத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை என்பதை திலக் தெருவிற்கு சூழ்ச்சியினால், கபட நாடகத்தினால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அன்புமணியின் பாமக தலைவர் பதவி காலம் 28.05.2025 உடன் நிறைவு பெற்றது. அந்த பதவியில் இல்லாதவர் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை எப்படி கூட்ட முடியும். அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது. அதுதான் அமைப்பு விதி. ராமதாஸ்தான் பொதுக்குழு கூட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 30ம் தேதியிலிருந்து ராமதாஸ்தான் தலைவர். தலைவர் என சொல்லிக்கொண்டு கடிதம் எழுதுவது, பொதுச்செயலாளர் என்பது மோசடி தான்.

முகவரி தேனாம்பேட்டையிலிருந்து திலக் தெருவிற்கு மாற்றப்பட்டதும் மோசடி. எந்த நடவடிக்கையாக இருந்தாலும் நிறுவனர் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும், ராமதாஸ் இல்லாமல் எதுவும் இல்லை.

ராமதாசை எந்த வகையிலும் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. பாமகவுக்கு அங்கீகாரம் இல்லை. அதனால் தேர்தல் ஆணையத்தை சந்தித்து மாம்பழம் சின்னத்தை வழங்க வலியுறுத்திவோம். அதன்மூலம் தேர்தல் ஆணையம் கொடுப்பார்கள். தலைவர் என்ற பெயரில் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ராமதாசுக்கு சொந்தமானது. முகவரி மாற்றம்தான் குழப்பத்திற்கு காரணம். முகவரி மாற்றப்பட்டது ராமதாசுக்கு தெரியாது. பாமக ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு விரைவில் பதில் வரும். ராமதாசுடன், அன்புமணி சேர்ந்து நடப்பதுதான் நல்லது. எல்லாரும் ஏற்றுக் கொள்கிற தலைவராக ராமதாஸ் உள்ளார். பாமகவில் இருவரையும், நான் தான் பிளவுபடுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். ராமதாஸ் நான் சொன்னால் கேட்பாரா?. ஸ்ரீகாந்திக்கு நிர்வாக குழு உறுப்பினர் பதவி தவிர, வேறு பதவிகள் வழங்கும் எண்ணமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* ராமதாஸ்-அன்புமணி இன்று இரு அணியாக அஞ்சலி

வன்னியர்களுக்காக தொடங்கப்பட்ட பாமகவில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு செப்டம்பர் 17ம்தேதி ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதன்முறையாக இரு அணிகளாக சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்குள் மோதல் ஏற்படாமல் இருக்க காவல்துறை குறிப்பிட்ட காலஇடைவெளியில் நேரம் ஒதுக்கி அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலை தைலாபுரம் தோட்டத்திலிருந்து புறப்படும் ராமதாஸ் திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்திற்கு சென்று 21 பேரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து பாப்பனப்பட்டு, கோலியனூரில் உள்ள நினைவு தூண்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். குறிப்பிட்ட நேர இடைவெளியில் அன்புமணி திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இரு அணிகள் மோதல் ஏற்படாமல் இருக்க எஸ்பி சரவணன் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* அரசு சார்பில் மரியாதை

விழுப்புரம் வழுதரெட்டியில் அரசு சார்பில் ரூ.5.70 கோடியில் நினைவுச் சின்னங்களுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி 28ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு முதன்முறையாக அரசு சார்பில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

* பேனரில் ஸ்ரீகாந்தியின் படம்

விழுப்புரம் நகரம் மற்றும் தியாகிகள் நினைவு தூண்கள் அமைக்கப்பட்ட பகுதியில் ராமதாஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அன்புமணி பெயர், புகைப்படங்களை நீக்கி மகள் ஸ்ரீகாந்தியின் புகைப்படத்தை பெரிய அளவில் வைத்துள்ளனர். அதேசயம் அன்புமணி தரப்பில் வைக்கப்பட்ட பேனரில் சிறியளவில் ஓரமாக ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.