ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் குற்றச்சாட்டு மனு பொய்யான தகவலை கொடுத்து அன்புமணி ஏமாற்றியுள்ளார்: பரிசீலனை செய்வதாக ஆணையர் உறுதி
சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் பாமகவின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு அணி ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர்கள் அருள் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை நேற்று சந்தித்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தரப்பு அணியினர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாமக கட்சியில் ராமதாஸ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அந்த விவகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாம்பழச் சின்னம் ராமதாஸ் அணிக்கு மட்டும் தான் சொந்தமாகும். ராமதாஸ் தரப்பில் 12 கடிதங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்து மறைக்கப்பட்டு, போலியான ஆவணங்களை அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் எங்களது கடிதங்களை ஆய்வு செய்து ஒரு நியாயமான முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்றால், ராமதாஸ் அணி தரப்பில் இருந்து கண்டிப்பாக நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் மன்றம் ஆகியவை முன்னிலையில் எங்களது கோரிக்கையை முன்வைத்து சட்ட போராட்டங்களை மேற்கொள்வோம். பாமக கட்சி விவகாரத்தில் ராமதாசை ஏமாற்ற மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டதன் காரணமாகவே அவருடைய பதவிக்காலம் முடிந்தவுடன் கூட்டப்பட்ட நிர்வாக குழுவில், ராமதாஸ் தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று அனைவரும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் ராமதாஸ் தலைவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் ஆவணங்களை முறையாக ஆராயாமல் இதுபோன்ற கடிதத்தை அன்புமணிக்கு எழுதியுள்ளது சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ராமதாஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். அதேப்போன்று அன்புமணி பக்கம் சில நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர். அன்புமணிக்கு ஆதரவாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளது. அன்புமணி வேண்டுமானால் எனது பெயரின் முதல் எழுத்தை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதில் முக்கியமாக உரிய விசாரணை அடிப்படையில் தான் அங்கீகாரம் என்பது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பீகார் தேர்தலில் போட்டியிடப் போவதாக பொய்யான தகவலை அளித்து அன்புமணி, இதுபோன்ற கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் இருந்து சட்ட விதிகளுக்கு புறம்பாக வாங்கி உள்ளார். அது நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவை அனைத்தும் குறித்தும் தலைமை தேர்தல் ஆணையரிடம் நேரடியாகவும், மனுவிலும் விளக்கமாக எடுத்துரைத்தோம்.
உடனடியாக அவர் மூன்று தேர்தல் அதிகாரிகளை அழைத்து எங்களது தரப்பு கோரிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்த ஒருசில நாட்களில் ஆய்வு செய்து பதிலளிபதாக தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் விரைவில் ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.