சென்னை: பாமக நிறுவனர் ராமதாசை கொச்சைப்படுத்தினால் அது துரோகம் என்று அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஜி.கே.மணி கடுமையாக சாடியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பிறகு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று அளித்த பேட்டி: ராமதாசால் தொடங்கப்பட்டது பாமக. ஆனால், தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கிய அவரையே பாமக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கொச்சைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் வேதனையளிக்கிறது.
இது ராமதாசை அவமானப்படுத்தும் செயல் அல்ல; தங்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்த மக்களை அவமானப்படுத்தும் செயல். ஊடக நண்பர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், பாமக.வினருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். பாமக என்றால் அது ராமதாஸ் தான். மருத்துவர் அய்யா என்றால் அது பாமக தான். இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதை விடுத்து, சுயநலத்திற்காகவோ அல்லது ராமதாசை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ ஊடகங்களில் பேசுவதும், தனியாக நிகழ்ச்சிகள் நடத்துவதும் ஏற்புடையதல்ல. நன்றி மறப்பது நன்றன்று, இச்செயல் ஒரு துரோகச் செயலாகவே பார்க்கிறோம். சமூகநீதிக்காக 46 ஆண்டுகளாக போராடும் தலைவர் அவர். ஒன்றிய அரசுப் பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர்.
பதவிக்கு ஆசைப்படாத தலைவர். அப்படிப்பட்டவரை அவமானப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனியாவது அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பாமகவில் இருப்பவர்கள் ராமதாசின் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அதுதான் கட்சிக்கு வலிமை. இதுவே எங்களின் நிறைவான மற்றும் எச்சரிக்கையான வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.