திருவிடைமருதூர்: ராமதாஸ் ஆதரவாளரை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின்(55). ராமதாஸ் ஆதரவாளரான இவர், தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளர். கடந்த 5ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது ஸ்டாலினை ஒரு கும்பல் வெடிகுண்டி வீசி கொல்ல முயன்றது. இதில் ஸ்டாலின், உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் 7 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு தயாரித்து கொடுத்த கும்பகோணத்தை சேர்ந்த லெட்சுமணன் என்பரை போலீசார் கடந்த 9ம்தேதி விசாரிக்க சென்ற போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து குற்றவாளிகளை, தேடி தனிப்படை போலீசார் சேலத்தில் முகாமிட்டிருந்தனர். போலீசாரின் தீவிர தேடுதலில், சேலத்தில் பதுங்கி இருந்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சுக்கிரவாத கட்டளை தெரு, கீழதூண்டி விநாயகம் பேட்டையை சேர்ந்த மகேஷ்(42), மருதுபாண்டி(32) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் ஆடுதுறைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதுதொடர்பாக 2 பேர் அளித்த தகவலின் ேபரில் தனிப்படை போலீசார் நேற்று தஞ்சாவூரை சேர்ந்த கரன், சஞ்சய் ஆகிய 2 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.