சென்னை : சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை, முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு வைகோவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் சளி பாதிப்பால் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். வைகோ குடும்பத்தினரை சந்தித்து அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் முதலமைச்சர் கேட்டறிந்தார். இதனிடையே, ராமதாஸை, முதலமைச்சர் சந்தித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்பிற்குரிய மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களைச் சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்.அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்."இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு பதிவில், "அண்ணன் திரு. வைகோ அவர்கள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்ததுமே நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.ன்று மருத்துவமனைக்குச் சென்று, அவரது குடும்பத்தாரிடமும், மருத்துவரிடமும் அவரது சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தேன்."என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.