Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள், கமல் போட்டியின்றி தேர்வு: அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் பதவியேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் 6 பேரும் எம்பிக்களாக பதவியேற்பார்கள். தமிழ்நாட்டில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை சென்னை, தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், ராஜாத்தி என்கிற கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுதவிர அக்னி ஆழ்வார், கண்டே சயன்னா, ரெ.கந்தசாமி, மு.சுப்பிரமணியன், கு.பத்மராஜன், து.கு.மேஷாக் கிருபாகரன் ஆகிய 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனு செய்தனர்.

வேட்புமனு பரிசீலனை கடந்த 10ம் ேததி காலை தேர்தல் அதிகாரியும் சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளருமான சுப்பிரமணியம் முன்னிலையில் நடந்தது. அப்போது, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், ராஜாத்தி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்தது மற்றும் அவர்களின் ஆவணங்கள் சரியாக இருந்ததால் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேருக்கு ஒரு எம்எல்ஏ கூட முன்மொழியாததால் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 6 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், மனுக்களை வாபஸ் வாங்க நேற்று (12ம் தேதி) மாலை 3 மணி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. இதையடுத்து நேற்று மாலை 3 மணி வரை அரசியல் கட்சி வேட்பாளர்கள் 6 பேரும் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேர் மட்டுமே களத்தில் இருந்தனர். எனவே, 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதனை ெதாடர்ந்து திமுக வேட்பாளர்களான வில்சன், ராஜாத்தி, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். அப்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தனர். இதைதொடர்ந்து அதிமுக வேட்பாளர்களான இன்பதுரை, தனபால் ஆகியோர் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட திமுக வேட்பாளர்களான வில்சன், ராஜாத்தி, சிவலிங்கம் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர்கள் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய எம்பிக்களாக பதவியேற்றுக்கொள்வார்கள். இவர்களின் பதவிகாலம் 6 ஆண்டுகள் ஆகும்.