Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநிலங்களவை சீட் தருவதாக கூறி முதுகில் குத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி: பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தேமுதிக-அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மேலும் எடப்பாடியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே தொடருகிறது. மேலும் திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவும் வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தற்போது மீண்டும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் பாஜ கூட்டணியில் இருந்த பாமக, அமமுக தங்களுடைய உறுதியான நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அணி வெளியேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவும் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக கூறி எடப்பாடி ஏமாற்றி விட்டதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் தேமுதிக மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சட்சபை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முக்கிய முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். அவர் என்ன முடிவை எடுக்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தி.நகரில் நேற்று தேமுதிக பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிரேமலதா பல்வேறு ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்கினார்.

கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:

வாக்குறுதி கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார் என்பது உன்மைதான். வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பினோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார். மாநிலங்களவை சீட் தருவதாக கூறி முதுகில் குத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம். அதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் இபிஎஸ்ஸின் மாண்பு பாதிக்கப்படும்.

எடப்பாடி பழனி சாமியின் சுற்றுப்பயணத்திற்கு எப்படி கூட்டம் கூடுகிறது என்று உலகத்திற்கே தெரியும். எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் தொண்டர்களும், மக்களும் திரண்டு வருகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரேமலதா எடப்பாடி குறித்து கடுமையாக விமர்சித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது.

தேமுதிக உடன் கூட்டணி

ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். அதனால்தான் நாம் ஏமாந்து விட்டோம். அதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் இபிஎஸ்சின் மாண்பு பாதிக்கப்படும்