டெல்லி: மாநிலங்களவை தலைவராக பணியை தொடங்கியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மாநிலங்களவையில் திருச்சி சிவா வாழ்த்துகளை தெரிவித்தார். அவையை மட்டுமல்லாமல் அவை உறுப்பினர்களையும் காக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது. தங்களது வருகையால் புதிய அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் குரல் மட்டுமல்ல சிறுபான்மையினரின் குரலுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அனைவரையும் சமமாக பார்க்கும் பாரம்பரியம், கலாச்சாரத்தில் சிறந்த தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளீர்கள். ஏற்கனவே தாங்கள் வகித்த அனைத்து பதவிகளிலுமே அனைவரும் சமம் என்ற கொள்கையை பிரதிபலித்தீர்கள். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மைய மண்டபத்தை ஏற்படுத்த அவைத் தலைவருக்கு திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கனி" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். சமன்செய்து சீர்தூக்கும் குறள்போல் அவையை நடுநிலையாக நடத்த திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்தார். எங்களுக்கும் பல கோரிக்கைள் உள்ளன, எங்கள் கோரிக்கைகள் கேட்கப்படும் வரை அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்போம் என தெரிவித்தார்.
மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர்., நெல் ஈரப்பதம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

