ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முறைகேடு நடப்பதாகக் கூறி அவதூறு: வேலூர் இப்ராஹிம், கடலூர் சிறையில் அடைப்பு
கடலூர்: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாக அவதூறு பரப்பிய வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாக அவதூறு குற்றசாட்டை கூறி நேற்றைய தினம் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் அத்துமீறி மருத்துவமனைக்குள் நுழைய முயன்றார்.
அங்கு இருந்த பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார். இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். குறிப்பாக, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆவேசமாக பேசுதல், மிரட்டல், தவறான தகவல்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், தொற்று நோயை பரப்புதல் என 5 பிரிவுகளின் கீழ் வேலூர் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்பது மற்றும் நிர்வாக காரணங்களுக்காக புழல் சிறை காவலர்கள் அவரை கடலூர் சிறைக்கு கொண்டு செல்லுமாறு போலீசாரிடம் அறிவுறுத்தினர். இதை அடுத்து போலீசார் அவரை கடலூர் சிறைக்குக் கொண்டு சென்று இன்று அதிகாலை கடலூர் சிறையில் வேலூர் இப்ராஹிமை அடைத்தனர்.