ராஜஸ்தானின் அஜ்மீரில் 50 ஆண்டுகளில் இல்லாத பெரு மழை: அஜ்மீரில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளப்பெருக்கு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 15க்கும் மேற்பட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ராஜஸ்தானின் அஜ்மீரில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டிய பெரும் மழையால் பூஷ்கார் ஏரி நிரம்பி வழிகிறது. அஜ்மீர் நகரில் ஏராளமான வீதிகள் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள் அவதியுற்றனர்.
பரத்பூர் மாவட்டம் லகான்பூரில் தடுப்பணை உடைந்து கிராமத்திற்குள் புகுந்த வெள்ளத்தால் வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைத்தனர். ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ராட்சமத் அருகே குளம் உடைந்து பெருக்கெடுத்த வெள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்து மூன்று மாணவர்கள் மூன்று ஆசிரியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். மத்தியப்பிரேதேசத்தின் குவாலியரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதியுற்று வருகின்றனர்.