ராஜஸ்தானில் தீ விபத்தில் சிக்கிய பேருந்து.. 20 பேர் உடல் கருகி பலி: பிரதமர் மோடி இரங்கல்; இழப்பீடு அறிவிப்பு!!
டெல்லி: ராஜஸ்தானில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், பேருந்தில் பயணித்தவர்களில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி தனியார் பேருந்தில் 53 பேர் நேற்று பிற்பகலில் பயணித்தனர். ஜெய்சால்மர்- ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியானது.
ஆபத்தை உணர்ந்த டிரைவர், பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. பயணிகள் அலறியடித்தபடி பேருந்தை விட்டு வெளியேற முயற்சித்தனர். ஆனபோதும் 20 பேர் தீப்பிடித்து உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார், மருத்துவக்குழுவினர் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறிய போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவத்துக்கு, தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்; ஜோத்பூரில் நடைபெற்ற பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.