Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜபாளையம் அருகே நள்ளிரவில் பயங்கரம் 2 காவலாளிகளை வெட்டி கொன்று கோயிலில் நகை, பணம் கொள்ளை: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே காவலாளிகள் 2 பேரை வெட்டிக் கொன்று கோயிலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலில் தேவதானம் கிராமத்தை சேர்ந்த சங்கரபாண்டியன் (65), தேவதானம் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்த பேச்சிமுத்து (50) ஆகியோர் தற்காலிக இரவு காவலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். நேற்று காலை 6 மணியளவில் பகல்நேர காவலாளியான மாடசாமி கோயிலுக்கு வந்தார். அப்போது, உள்ளே காவலாளிகள் இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த மாடசாமி, உடனடியாக சேத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் இரண்டு கார்களில் வந்த மர்மக்கும்பல், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, கோயிலுக்குள் ஏறி குதித்துள்ளனர். கோயில் காவலாளிகள் 2 பேரையும் வெட்டி கொலை செய்து, உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும், அம்மன் மற்றும் சுவாமி மீது சார்த்தி இருந்த நகைகளையும், சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றது தெரிய வந்தது.

மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் விருதுநகர் எஸ்பி கண்ணன் மற்றும் 3 ஏடிஎஸ்பிகள், 2 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்து அறநிலையத்துறை மதுரை சரக இணை ஆணையர் மாரியப்பன் கோயிலை பார்வையிட்டார். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கோயில் நகைகள் அனைத்தும் ஊருக்குள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டதால் அவை கொள்ளை போகாமல் தப்பியது. இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கோயில் விவகாரத்தில் சமுதாயத் தலைவர் வெட்டிக்கொலை

தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (65). சமுதாயத் தலைவரான இவர், அங்குள்ள கோயிலை நிர்வகித்து வந்து உள்ளனர். தற்போது, மீண்டும் அந்த கோயிலுக்கு பதவிக்கு வர வேண்டும் என்று முயற்சித்து வந்தார். இதற்கு இவருடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியில் இவர் 10 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். அறுவடை முடிந்த நிலையில், களத்தில் நெல்லை குவித்து வைத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலையில் டூவீலரில் 2 மர்மநபர்கள் ஹெல்மெட் அணிந்தபடி அங்கு வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பால்பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்த பால்பாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். கோயில் பிரச்னையில் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.