ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்கள் காண்போரை கவருகிறது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் கார்த்திகை மாதத்தில் பூக்கும் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்து காணப்படும் இம்மலர்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. இம்மலர்கள் மிகவும் சுத்தமான இடத்தில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை. இவைகளை கார்த்திகைப் பூக்கள் என்றும், கணவழிப்பூக்கள் என அழைப்பர்.
ராஜபாளையம் அய்யனார் கோவிலுக்கு செல்லும் பாதையிலும், செண்பகத் தோப்புக்கு செல்லும் சாலையிலும் இந்த மலர்கள் ஏராளமாக பூத்துக் குலுங்குகின்றன. கோயிலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை பார்த்து ரசித்து போட்டோ, செல்பி எடுத்துச் செல்கின்றனர். இம்மலர்களின் வேர்களில் இருக்கும் கிழங்குகள் சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சித்த மருத்துவத்திற்காக செங்காந்தள் மலர்களின் வேர்களின் கிழங்குகளை பறித்துச் சென்றுவிடுகின்றனர். வேர்கள் இல்லாததால் மலர்கள் கருகும் அபாயம் உள்ளது. மலர்கள் பூத்த உடனே வேரை ஒட்டியுள்ள கிழங்குகளை எடுத்துச் செல்கின்றனர். எனவே, வனத்துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, தமிழக அரசின் மலராக போற்றப்படும் செங்காந்தள் மலர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



