Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மழைக் காலங்களில் மின்தடை ஏற்படக்கூடும்; உரிய குளிர்நிலையில் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: மழைக் காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படக்கூடும் என்பதால் மருத்துவமனைகளில் உரிய குளிர்நிலையில் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 11 வகையான தடுப்பூசிகளும், குழந்தைகளுக்கு 12 வகையான தடுப்பூசிகளும் வழங்கப்படுகிறது.

காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இன்ஃப்ளூயன்ஸா நிமோனியா, ரணஜன்னி, தட்டம்மை, ரூபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்த தடுப்பூசிகள் உதவுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 9,58,000 கர்ப்பிணிகளும், 8,76,000 குழந்தைகளும் இதில் பயனடைகின்றனர்.

தமிழகத்திலுள்ள 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அந்த சேவை வழங்கப்படுகிறது. இதைத் தவிர, ரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் பாம்புக் கடிக்கான மருந்துகளும் அங்கு வழங்கப்படுகின்றன. அவை அனைத்துமே தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன. தடுப்பூசிகளைப் பொருத்தவரை குறிப்பிட்ட குளிர்நிலையில் பராமரிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு இல்லாவிடில் அதன் வீரியம் குறைந்துவிடும்.

தற்போது மழைக் காலம் என்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படும் சூழல் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் முழுமையான ஜெனரேட்டர் வசதிகளோ அல்லது மாற்று மின் இணைப்பு ஏற்கனவே தயாராக வைத்து இருக்க வேண்டும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஏனென்றால் சில மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டாலும் தடுப்பூசிகளின் குளிர் நிலை குறைந்துவிடும். இதனால் அவை செயல் திறன் இழந்துவிடும்.

இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கும் பொது சுகாதாரத் துறை சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. அதன்படி, மழைக் காலங்களில் மின்சார வாரியத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், உரிய மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசிகளை தட்பவெப்பத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.