Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மழைக்காலத்திற்கு முன்பாக அத்திமரப்பட்டி, முள்ளக்காடு பகுதி உப்பாற்று ஓடை முழுவதும் தூர்வாரப்படும்

*ஆய்வுக்கு பின் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி : மழைக்காலத்திற்கு முன்பாக அத்திமரப்பட்டி, முள்ளக்காடு பகுதிகளில் உப்பாற்று ஓடை முழுவதும் தூர் வாரப்படும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி, முள்ளக்காடு பகுதிகளில் மழைநேரங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் விவசாயம் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

எனவே இந்த முறை முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் செல்லும் உப்பாற்று ஓடையை சீரமைத்து மழைநீரை கடலுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து உப்பாற்று ஓடை தூர்வாரி சீரமைக்கும் பணியையும், முள்ளக்காடு நான்குவழிச்சாலை அருகே கோவளம் கடல் பகுதிக்கு தண்ணீர் செல்லும் இடங்களையும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மழைக்காலத்தில் இந்த பகுதியில் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாவது குறித்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி மற்றும் விவசாயிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் எடுத்துக்கூறினர். மழைக்காலத்தில் அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயமும், மக்களின் குடியிருப்புகளும் கடுமையான பாதிப்பை சந்திக்க கூடிய நிலை இருந்து கொண்டிருக்கிறது. கழிவுநீர் வடிகாலை விட வயல்கள் பள்ளத்தில் இருப்பதால் தண்ணீர் வயல்களுக்குள் வந்து விடுகிறது. இதனால் கழிவுநீர் வடிகாலை இன்னும் ஆழமாக தோண்டி அதில் உள்ள கற்களை எல்லாம் அகற்றினால் தான் கடலுக்கு தண்ணீர் சீராக செல்லமுடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ‘மழைக்காலத்திற்கு முன்பாக அத்திமரப்பட்டி, முள்ளக்காடு பகுதிகளில் உப்பாற்று ஓடை முழுவதும் தூர் வாரப்பட்டு, மழைநீர் வயலுக்குள் புகாதவாறு கடலுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார். அதனை தொடர்ந்து உடனடியாக இரண்டு ஜேசிபிகளை கொண்டு உப்பாற்று ஓடையை தூர்வாறும் பணிகள் தொடங்கியது.

மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, பொறியாளர் தமிழ்செல்வன், அத்திமரப்பட்டி விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, துணைத்தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி என்ற சின்னராசு, பொருளாளர் சின்னக்குட்டி தானியேல், வேளாண்மை அதிகாரி பெரியசாமி, மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தா், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் செல்வக்குமார் மற்றும் மணி, அல்பர்ட், வட்டப்பிரதிநிதி பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.