Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழைநீர் சேமிக்கும் வகையில் ரூ.159.08 கோடி மதிப்பீட்டில் 70 குளங்களில் புனரமைப்பு: 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் மழைநீர் தேக்கத்தை தவிர்த்து, மழைநீரை சேமிக்கும் வகையில் ரூ.159.08 கோடியில் 70 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் பருவமழையை முன்னிட்டு ஆறுகள், நீர்வழி கால்வாய்களை தூர்வாரி அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல், ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுத்து, மழைநீரை சேமிக்கும் வகையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

முக்கியமாக குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளையும் மக்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தை சுற்றி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், பூங்காக்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்களை உருவாக்குதல், புதிதாக குளங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னையில் 210 குளங்கள் இருந்த நிலையில் தற்போது, கடந்த 4 ஆண்டுகளில் மேலும் 41 குளங்கள் என அமைக்கப்பட்டு, மொத்தம் 251 குளங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 70 குளங்களில் ரூ.144.34 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர ரூ.14.74 கோடியில் பூங்காக்களில் தேங்கும் மழைநீரை முழுமையாகச் சேகரித்து சேமித்திடும் வகையில் 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைத்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் தென் சென்னை பகுதியில் 22 குளங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது, மேலும் 44 குளங்களில் ரூ.119.32 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் கடந்த ஆண்டில் 4 புதிய குளங்கள் அமைக்கப்பட்டது. அதன், கொள்ளளவை இந்த ஆண்டில் இரட்டிப்பாக மேற்கொள்ளுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எம்.ஆர்.டி.எஸ். பகுதியில் சிக்ஸ்வென்ட் கல்வெர்ட் அருகில் கடந்த ஆண்டில் 2 குளங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

2021ம் ஆண்டு முதல் ரூ.144.34 கோடியில் 70 குளங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டு ரூ.7.67 கோடியில் 57 நீர் உறிஞ்சும் பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மூலதன நிதியின் கீழ், மொத்தம் ரூ.6.34 கோடியில் புதிதாக 27 நீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-35க்கு உட்பட்ட முத்தமிழ் நகர்-9வது தெரு, வார்டு-37க்கு உட்பட்ட ஜவஹர் தெரு மற்றும் சசிரேக்கம்மா நகர், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-112க்கு உட்பட்ட அன்பழகன் பூங்கா என மொத்தம் ரூ.72.60 லட்சத்தில் 4 நீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், ரூ.159.08 கோடியில் 70 குளங்களில் புனரமைப்பு பணிகள் மற்றும் 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக பருவமழை காலங்களில் அதிக அளவில் மழைநீரை சேமித்து சாலையில் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர்த் தேக்கத்தை தவிர்ப்பதற்கும், மழைநீரை நிலத்தடியில் சேமிப்பதற்கும் மிகச் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.