ஆரணி அடுத்த வடுக்கசாத்து ஊராட்சியில் ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களில் புகும் மழைநீர்
*நடவடிக்கை கோரி ஆர்டிஓவிடம் மனு
ஆரணி : ஆரணி அடுத்த வடுக்கசாத்து ஊராட்சியில் ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்துவிடுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்டிஓவிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று ஆர்டிஓ சிவா தலைமையில் நடந்தது. இதில், வருவாய் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஆர்டிஓ சிவா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.
இதில் ஆரணி அடுத்த வடுக்கசாத்து ஊராட்சியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எங்கள் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். ஊராட்சியில் உள்ள தர்மராஜா கோயில் அருகில் அரசு சொந்தமான இடம் உள்ளது. அதனால், ஊரக வளர்ச்சி துறை சார்பில் பொதுமக்கள் நலன் கருதி சமுதாய கூடம் மற்றும் திருமண மண்டபம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், வடுக்கசாத்து ஊராட்சியில் பொய்யன் ஏரி மற்றும் ரத்தினதாங்கல் ஏரிக்கால்வாய்களை தனிநபர்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாததால் நெற்பயிர்கள் மற்றும் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து செல்வதால், பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.
கூட்டத்தில் பட்டா தொடர்பான மனுக்கள், நில அளவை, தமிழ்நில திருத்தம், வாரிசு சான்று, இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றுதல், உட்பிரிவு பட்டா மாற்றம், பாதை அமைத்துதர கோரி, வில்லங்க சான்றில் பெயர் மாற்றம், ஊராட்சி செயலாளர் மீது புகார், பத்திரபதிவு ரத்து செய்யகோரி என 76 கோரிக்கை மனுக்களை ஆர்டிஓ சிவா பெற்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.