Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழை வருது…மழை வருது!

மழைக்காலம் எவ்வளவு சந்தோஷமானதோ அந்தளவுக்கு சங்கடமானதும் கூட. ஆனால் பெய்யும் மழையால்தான் இன்று நாம் வயிறார சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே மழை, குளிர் எல்லாம் குறைந்து ஏறக்குறைய பாலைவன வெப்பத்துக்கு சற்றும் சளைக்காமல் நம் சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் நமக்குக் கொடையாக பெய்யும் மழையை ரசித்து வரவேற்போம். எவ்வளவு வெயில் அடித்தாலும் அதனை சமாளித்து விடுகிறோம். ஆனால் சின்னதாய் தூரல் தூறினாலே பரணையில் தூக்கிப் போடப்பட்ட பழைய குடையை தூசிதட்டி எடுப்போம். வெளியிலே போகலாமா, வேண்டாமா? என்று யோசிப்போம். ‘வானம் பொழிகிறது, பூமி விளைகிறது’ இதனால் உணவு உற்பத்தி ஆகி மக்கள் பசி தீர்கிறது!‘விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது’ என்று மழையின் பெருமையினை ‘வான் சிறப்பு’ அதிகாரத்தில் வள்ளுவர் குறளாய் வடித்திருக்கிறார். வானம் பொய்த்து விட்டால் உலகம் வறண்டு விடும்.

மழை பெய்தால் பெரும்பாலும் பலர் ‘ஹையோ! மழை வந்திடுச்சே’ என்று மழையை வசை பாடி வருந்துவர். மழை, வெயில், பனி இவைஇயற்கை எனும் இறைவன் தந்த பரிசு. இவை ஏற்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தடுக்க நினைத்தாலும் அழிவு நமக்குத்தான். எனவே மழை பிடிக்காத மனித(ன்)ர் களாய் மழையை வெறுக்காமல் மழையை மகிழ்ச்சியோடு வரவேற்போம். மழைக் காலத்தில் நமக்கு ஏற்படும் தொல்லைகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வோம்?மழைக்காலம் வந்து விட்டால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். குளிக்க அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட மழையில் நனைந்து குதூகலமாய் விளையாடும். விளைவு ஜலதோஷம், சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்கக் கூடும். சளி, ஜலதோஷம், காய்ச்சல் வராமல் குழந்தைகளை ஜாக்கிரதையாக பராமரிக்க வேண்டும். மழையில் குழந்தைகளை நனைய விடக்கூடாது. சளி, இருமல், காய்ச்சல் வந்தால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். மழையில் நனைந்து விட்ட குழந்தையின் தலையை துவட்டி உடம்பைத் துடைத்து சாம்பிராணி புகை காட்டுவது சிறந்தது. அவ்வப்போது உணவில் மிளகு, சீரகம், பூண்டு உள்ளிட்டவைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தலைக்கு சாம்பிராணி போடும் வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுதல் நல்லது. தற்போது சாம்பிராணி மற்றும் ஆவி பிடிக்க மார்க்கெட்டில் எண்ணற்ற வசதிகள் நிறைந்த கருவிகள் வந்துவிட்டன.

மழைக்காலம் வந்துவிட்டால் ஏற்படும் தொல்லைகளில் ‘சேற்றுப் புண்’ணும் ஒன்று. மழைத் தண்ணீரில் அடிக்கடி நடந்து சென்றால் பாதங்களின் விரல் இடுக்குகளில் சேற்றுப் புண் வந்துவிடும். கூடிய வரை மழைநீரில் அடிக்கடி நடந்து செல்வதை தவிர்த்தால் சேற்றுப் புண் வருவதற்கு வாய்பில்லை. அப்படி வந்தால் மருந்துக் கடைகளில் விற்கும் அதற்கான ஆயின் மெண்டை தடவிக் கொள்ளலாம். மஞ்சள் பயன்படுத்தலாம். அத்தியாவசிய தேவைக்கு இன்றி, அனாவசியமாக மழை நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக இரவு நேரங்களில் செல்வது அவ்வளவு பாதுகாப்பானதல்ல. பெரும்பாலும் அதனைத் தவிர்ப்பது நல்லது. இரவில் முட்டியளவு மழை நீரில் நடந்து செல்லும் பட்சத்தில் விஷ ஜந்துக்கள் கடிக்கக்கூடும். நகரத்து மக்களுக்கு வேண்டுமானால் இது சம்பந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தியாதான் பாம்புக் கடி நாடுகளில் டாப் 10 இடத்தில் இருக்கிறது. மின் கம்பி அறுந்து கிடப்பதை இரவில் அறிய முடியாத காரணத்தால் அதனால் உயிருக்கு ஆபத்து நேரிடக் கூடும். சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் பைக், கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பஸ், ரயில் போன்ற வாகனங்களில் பயணம் செய்யலாம். பஸ், ரயில் போன்ற வாகனங்களும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் பயணம் செய்வதை தவிர்த்துவிடலாம்.

மழைக்காலங்களில் வீட்டிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழையினால் தரைகள், மாடிப் படிகட்டுகள் ஈரமாக இருக்கும். எனவே வேக வேகமாக நடக்காமல் நிதானமாக நடந்து வருவது நல்லது. வீட்டுக்குள் மட்டுமே பயன்படுத்தும் ரப்பர் செருப்புகளை பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் சுவர்கள் ஈரப்பதமாக இருக்கும். சுவரில் கசிகின்ற ஈரப்பதமானது மின் சுவிட்சுகளில் இருந்தால் சுவிட்சை ஆன் செய்யும் போது ஷாக் அடிக்க வாய்ப்புண்டு. சுவிட்ச் போடும் போது மின்சாரம் தாக்காத பொருட்கள் மூலமாக சுவிட்சை இயக்கலாம். சுவிட்ச் பழுதடைந்திருந்தால் உடனே சரி செய்து விட வேண்டும். இல்லையெனில் அது ஆபத்தானது.நம்மோடு ஓரிரு மாதங்கள் மட்டும் இருக்கப் போகிற மழைக்காலத்தை நாம் பாதுகாப்போடு எதிர் கொண்டு சமாளித்தோமானால் மழைக்காலம் சந்தோஷமான காலமாக இருக்கும். எனவே இயற்கை அளித்த பரிசான மழையை மகிழ்வோடு நேசித்து வரவேற்போம். பாதுகாப்போடு வாழ்வோம்.

- த.சத்தியநாராயணன்