சென்னை: வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் 3 காற்று சுழற்சிகள் உருவாகியுள்ளன. அதன்படி,மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக் கடல் பகதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று மேலும் வலுவடைந்து மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். அது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் வாய்ப்புள்ளது.
மேற்கண்ட நிகழ்வுகளின் காரணமாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் என்பதால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.