மழையால் குறுவை அறுவடை பாதிப்பு கொள்முதல் அளவை உயர்த்தி நிவாரணம் வழங்க வேண்டும்: வீரபாண்டியன் கோரிக்கை
சென்னை: தொடர் மழை காரணமாக குறுவை அறுவடைக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கொள்முதல் அளவை உயர்த்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக காவிரி டெல்டா பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குறுவை அறுவடை கடுமையாக பாதித்து வருகிறது.
வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் செய்யப்பட்ட குருவை சாகுபடி, நல்ல விளைச்சலை தந்திருந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல் முழுவதும் சாலைகளில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் மையங்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகளும் நனைந்து கொண்டிருக்கின்றன. கொள் முதல் செய்த நெல் மூட்டைகளை ரயில் மூலம் வெளியே எடுத்துச் செல்ல போதுமான லாரிகள் கிடைக்காத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், அரசும் பெரும் இழப்பை சந்திக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டங்களில் இருந்து போதுமான பொருள் போக்குவரத்து வாகனங்களை வரவழைத்து, கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து, முளைவிட்டு சேதமடைந்து விட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.