சென்னை: காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (31-08-2025) மற்றும் நாளை (1-09-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் நாளை மறுநாள் (2-09-2025) முதல் 05-09-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ, விம்கோநகரில் 23 செ.மீ, கொரட்டூரில் 18 செ.மீ, கத்திவாக்கத்தில் 13 செ.மீ மழை பதிவானது.
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர், விருதுநகர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.