சென்னை: தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் இன்று முதல் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வட இந்திய நிலப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள், புதியதாக வட கிழக்கு மாநிலங்களிலும் நுழைந்துள்ள காற்றழுத்த தாழ்வுச் சுழற்சிகள் எல்லாம் மேற்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தான் முதல் மகாராஷ்டிரா வரையில் மழையை கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் அண்டை நாடுகளிலும் கடும் மழைப் பொழிவு நீடித்து வருகிறது. தமிழகத்தின் வளி மண்டலம் வழியாக பசிபிக் கடல் பகுதி நோக்கி காற்று பயணப்பட்டு, சீனா நோக்கி சென்ற புயலுடன் கலந்தது. அதன் காரணமாக சீனாவில் கடும் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு திசையில் இருந்து புயல் கடந்து சென்று விட்டதால் தமிழகத்தில் தற்போது கிழக்கு நோக்கி பயணித்து காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக வட கடலோரத்தில் இரு காற்று இணைவு ஏற்பட்டு தமிழகத்தில் வடகடலோரத்தில் மழை பெய்யும். ஏற்காடு, கல்வராயன்மலைகள், கொடைக்கானல் பகுதிகளில் மழை பெய்யும் மற்றும் கிழக்கு நோக்கி காற்று பயணித்து வட கடலோரத்தில் மழை பெய்யும். 12ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை இரவில் மழை பெய்யும். இது வெப்ப சலன இடி மழையாகவே பெய்யும். பெரும்பாலும் மாலை இரவில் 1 மணி நேரமாவது பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை, அனைத்து மாவட்டங்களிலும் 13ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பெய்யும்.
திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென் மேற்கு பருவமழை படிப்படியாக அதிகரிக்கும். அப்போது படிப்படியாக வெயிலும் குறைய தொடங்கும். மழை தொடர்ந்து பெய்யும் நிலையில் காற்று குளிர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகி சீனாவுக்கு பயணிக்கும் வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் கரையோரத்தில் காற்று சுழற்சி ஏற்பட்டு குளிர்விக்கும் வாய்ப்பு உருவாகும்.