*பொதுமக்கள் கோரிக்கை
கடலூர் : கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் குண்டு சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதன் எதிரே தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் பயணிகள் நிழற்குடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணத்தினால் கரைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அதேபோல் கரையோரத்தில் இருந்த பயணிகள் நிழற்குடையும் இடிந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு ஆற்றுக் கரையோரத்தில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. ஆனால் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக இங்கு அமைக்கப்பட்டு இருந்த பயணியர் நிழற்குடையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில், மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர்.
தற்போது இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மழை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்கெடுக்க நீண்ட நேரம் நின்று பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள், மாணவர்கள், சிறுவர்கள் தினந்தோறும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டுமென பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.