நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
தேனி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், கும்பக்கரை அருவியில் திடீரென இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல், பாம்பார்புரம், வெள்ளக்கெவி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும்போது அருவிக்கு நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். மேலும், அருவியில் உள்ள யானைக்கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் பகுதிகளிலும் குளிக்கலாம். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் இங்கு வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல், வட்டக்கானல் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதையடுத்து கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிப் பகுதியை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கும், அருவிப் பகுதிக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தண்ணீர் வரத்து சீரான பின்னர் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பெரியகுளம் வனச்சரகர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.