திருச்சி: டெல்டா மாவட்டங்களில் நேற்றும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. திருச்சியில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 1.30 மணி நேரம் கொட்டியது. தாழ்வான பகுதிகள், வீதிகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் திருச்சி புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
கரூரில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மழை பொழிந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை பொழிந்தது.
திருவிடைமருதூர் தாலுகா சன்னாபுரம், கோவில் சன்னாபுரம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் சில நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சுமார் 100 ஏக்கர் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. சன்னாபுரம், கோவில் சன்னாபுரம் ஆகிய இடங்களில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீர் வடிய வழியில்லாமல் உள்ளது. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் புதர் மண்டி கிடக்கும் வடிகால் வாய்க்காலை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.