Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழைக்காலத்தில் கறவைமாடு பராமரிப்பு!

நமது நாட்டு இன மாடுகள் நம்மூர் காலநிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக்கொள்ளும். ஆனால் இப்போது நாம் பால் உற்பத்திப் பெருக்கத்திற்காக பல்வேறு கலப்பின பசுக்களை வளர்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இத்தகைய பசுக்களுக்கு நமது சீதோஷ்ண நிலை சில ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். எனவே அத்தகைய பசுக்களை மழைநாட்களில் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.

கொட்டகை பராமரிப்பு

மழைக்காலத்தில் கொட்டகையினுள் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். தரைப்பகுதி ஈரமாக இருந்தால் பசுக்கள் வழுக்கி விழும் அபாயம் உள்ளது.தரையில் நீர் தேங்கினால் பசுக்களுக்குக் குளம்பு அழுகல் நோய் வர நேரிடும். தரையில் பள்ளங்கள் இருந்தால் அவற்றினை மூடி சரிசெய்ய வேண்டும். தரையின் ஈரத்தை உறிஞ்சுவதற்கு சுட்ட சுண்ணாம்புத்தூளைத் தரையின் மீது தெளித்து விடவும். மழைச்சாரல் மற்றும் கூரை மீது விழும் மழைநீர் கொட்டகையினுள் வராமல் இருக்க கூரையின் விளிம்புகள் 75-90 செ.மீ வெளியே நீண்டு இருக்குமாறு அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் பிளாஸ்டிக் திரைச் சீலைகளைப் பக்கவாட்டில் கட்டி விடலாம். மழைநீர் கொட்டகையினுள் வராமல் பாதுகாக்கலாம். கூரையில் ஓட்டைகள் இருப்பின் மழைக்காலத்திற்கு முன்பே அதனை தார் சீட் போன்றவற்றைக் கொண்டு அடைத்து விட வேண்டும். கொட்டகையினைச் சுற்றி மழைநீர் தேங்காமல் வடிந்து விடுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கினால் கொசு மற்றும் ஒட்டுண்ணிகள் பெருகும் இடங்களாகிப் பசுக்களைப் பாதிக்கும்.

தீவன மேலாண்மை

தொடர்ச்சியாக மழை பெய்து வந்தால் மேய்ச்சலுக்குச் செல்லும் பசுக்கள்மேயாது. மழைக்கு ஒதுங்க இடம் தேடும். போதிய அளவு மேயவில்லை என்றால் பால் உற்பத்தி குறையும். எனவே மழை நாள்களில் கறவைப்பசு மற்றும் எருமைகளை மேய வெளியே விடாமல் அடர்தீவனத்தைச் சற்று கூடுதலாகக் கொடுக்க வேண்டும். இத்துடன் பசுக்களின் இருப்பிடத்திலேயே புல், தழை, வைக்கோல், சோளத்தட்டை போன்ற உலர் தீவனமும் உபரியாகக் கொடுத்துக் கறவைக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நிறைவு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் இருப்பில் உள்ள தீவனப் பொருள்கள் நனைந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். தீவனம் நனைந்தால் பூஞ்சைக் காளான் படர்ந்து நச்சு நோய் ஏற்படுத்தும். அடர்தீவனத்தைத் தரையிலிருந்து சற்று உயரமாக ஈரம் படாமல் சேமிக்க வேண்டும். வைக்கோல் மற்றும் சோளப் படப்புகளின் மீது பாலிதீன் விரிப்புகளைப் போட்டு போர்த்தி விடலாம்.புதுமழையின்போது புற்கள் துளிர்க்க ஆரம்பிக்கும். இளம்புற்களை மேயும் பசுக்கள் இளகிய சாணம் போடும். இதைக் கழிச்சல் என்று தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேய்ச்சலுடன் உபரியாக உலர்தீவனமான வைக்கோல், தட்டை கொடுத்து வந்தால் சாணம் இயல்பான நிலைக்கு மீண்டும் வரும்.

(மழைக்கால பசுக்கள் பராமரிப்பு குறித்த தகவல்கள் அடுத்த இதழிலும் இடம்பெறும்)