Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில் நிலையங்களுக்கிடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை திறந்து வைத்து, பெயர் சூட்டினார் முதலமைச்சர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரமானது பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. குட்டி ஜப்பான் என்றும் இந்நகரம் அழைக்கப்படுகிறது. சிவகாசி நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரத்தில் அமைந்திருக்கும் இரயில்வே கேட் ஒவ்வொரு முறையும் மூடப்படும்போது, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்ததோடு, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும், அவசரமாக மருத்துவமனை செல்லும் மக்களும் நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றும், அவர்களது சிரமத்தை போக்குவதற்காகவும், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே நிலையங்களுக்கு இடையே சாட்சியாபுரத்தில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவிற்கிணங்க, ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர் – அருப்புக்கோட்டை – திருச்சுழி – நரிக்குடி – பார்த்திபனூர் சாலையில் இரயில்வே கேட் எண். 427க்கு மாற்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி இரயில் நிலையங்களுக்கிடையே சாட்சியாபுரத்தில் 61 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு, அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-11-2025) திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் விடுதலைப் போராட்ட வீரரும், மதராசு மாநிலம் என்று அழைக்கப்பட்ட மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக, தனது வீட்டின் முன்பு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவரும் ஆவார். அன்னாரது தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புதிதாகத் திறந்து வைத்த மேம்பாலத்திற்கு “தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்” எனவும் பெயர் சூட்டினார்.

இந்த மேம்பாலத்தினால் சிவகாசியைச் சுற்றியுள்ள சாட்சியாபுரம், ஆனையூர், தேவர்குளம், திருத்தங்கல் உள்ளிட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 இலட்சம் மக்கள் பயன் அடைவார்கள். மேலும், இம்மாவட்ட மக்களின் முப்பது ஆண்டு கால கனவு தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.