மக்கள் புகார் குறித்து ஆய்வு நடத்த வராத ரயில்வே அதிகாரிகளை கண்டித்து எம்பி, மேயர் திடீர் ரயில் மறியல்: கடலூரில் பரபரப்பு
கடலூர்: கடலூர் மாநகரில் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகர் என 2 இடங்களில் பிரதான ரயில் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளது என பொதுமக்கள், சமூக அமைப்புகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மந்தகதியில் நடந்து வந்த திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் நேற்று திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள அறிவித்திருந்தார். இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு விஷ்ணு பிரசாத் எம்பி ஆய்வுக்காக வருகை தந்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமார்பன், வர்த்தக சங்க பேரவை பக்கிரான், பிஎஸ்என்எல் குழு உறுப்பினர் கோவிந்தன் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் அவருடன் வருகை தந்தனர். இருப்பினும் ரயில்வே துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதை கண்டித்து விஷ்ணு பிரசாத் எம்பி, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி, காங்கிரஸ் ரவிக்குமார், மணிகண்டன், திலகர், விஜயசுந்தரம், சமூக ஆர்வலர்கள் மதி உள்ளிட்ட ஏராளமானோர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் போராட்டம் நடைபெறுவது குறித்து ரயில் லோகோ பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரயில் நிலையத்திற்கு வெளியே சற்று தொலைவிலேயே ரயில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை தண்டவாளத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் சோழன் எக்ஸ்பிரஸ், ரயில் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி சென்றது. இதையடுத்து ரயில்வே துறை கூடுதல் மண்டல பொறியாளர் சரவணமூர்த்தி, எஸ்எஸ்இ பாலாஜி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.