கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மானவர்கள் பலி எதிரொலி: அனைத்து ரயில் பாதை லெவல் கிராஸிங்குகளிலும் சிசிடிவி: இன்டர்லாக்கிங் வசதிகளை விரிவுபடுத்த ரயில்வே முடிவு: 15 நாட்கள் ஆய்வு தொடங்கியது
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதை லெவல் கிராஸிங்கில் பயணிகள் ரயில், பள்ளி வேனுடன் மோதி மூன்று குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவத்தை அடுத்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து ரயில் பாதை லெவல் கிராஸிங்குகளிலும் சிசிடிவி அமைப்பு மற்றும் பதிவு வசதிகளை அமைக்கவும், இன்டர்லாக்கிங் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு போக்குவரத்து அளவு வரம்பை (TVU) 20,000லிருந்து 10,000ஆக குறைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
அனைத்து லெவல்கிராஸிங் கேட்களிலும் சிசிடிவி அமைப்பு முன்னுரிமையுடன் அமைக்கப்படும். இதற்கு சூரிய ஒளி மின்கலங்கள், பேட்டரி மறுசார்ஜ், யுபிஎஸ் மற்றும் வணிக மின்சாரம் மூலம் மின்சாரம் வழங்கப்படும். இன்டர்லாக்கிங் பணிகளை விரைவுபடுத்தவும், ரயில்வே பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இன்டர்லாக்கிங் இல்லாத லெவல்கிராஸிங்குகளில், ஸ்டேஷன் மாஸ்டரின் சமிக்ஞையால் ரயில்கள் இயக்கப்படுவதால், கேட் மூடப்படாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இன்டர்லாக்கிங் அமைப்பு மூலம், கேட் மூடப்படும் வரை ரயிலுக்கு பச்சை சமிக்ஞை வழங்கப்படாது. 10,000 TVU-ஐ தாண்டிய அனைத்து கேட்களும் இன்டர்லாக்கிங் வசதியுடன் பொருத்தப்படும். இந்த பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லாமல், தற்போதைய பட்ஜெட்டிலேயே செயல்படுத்தப்படும்.மேலும், இன்டர்லாக்கிங் இல்லாத லெவல்கிராஸிங்குகளில் தினசரி குரல் பதிவு சோதனை நடத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் தினமும் குறைந்தபட்சம் இரண்டு கேட்களில் இந்த சோதனை நடைபெறும். வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகளை ஒரே மாதிரியாக்குவதற்கும், மோதல்-புரிந்த லெவல்கிராஸிங்குகளில் ரயில்வே பாதுகாப்பு படை (RPF) மற்றும் காவலர்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான 15 நாள் பாதுகாப்பு ஆய்வு இயக்கம் நேற்று முதல் தொடங்கியது.
தெற்கு ரயில்வேயில், லெவல் கிராசிங் கேட்களில் விபத்துகள் நேரிடுவதை தடுக்க ரயில் பாதைக்கு கீழே பல்வேறு சுரங்கப்பாதைகள் அல்லது தண்டவாளத்திற்கு மேல் பாலங்கள் அமைக்கப்படும்.
இந்த இறுதி தீர்வுக்கான பணிகளை மேற்கொள்ள நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானப் பணிகள், நிதி ஒதுக்கீடு, திட்டங்களுக்கு ஒப்புதல் என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இன்டர் லாக்கிங் முறை இல்லாததால் விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே மொத்தம் உள்ள 1643 லெவல் கிராசிங் கேட்களில் 276 கேட்களில் இன்டர் லாக்கிங் முறை அமைக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே இரண்டு வழிகளில் பணியாற்றி வருகிறது. சாத்தியமுள்ள இடங்களில் ரயில் பாதைகளுக்கு குறுக்கே சுரங்க பாதைகள், மேம்பாலங்கள் அமைக்கப்படும். 276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் முறை அமைக்கப்படும்.
2025-26 ரயில்வே திட்டத்தில், லெவல்கிராஸிங் பாதுகாப்பு பணிகளுக்கு 706 கோடி ரூபாயும், மேம்பாலம்/கீழ்ப்பாலம் பணிகளுக்கு 7,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1, 2024 நிலவரப்படி, 17,083 மனிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள லெவல்கிராஸிங்குகள் இருந்தன. இதில் 497 கடந்த நிதியாண்டில் அகற்றப்பட்டன. தேசிய ரயில் திட்டத்தின்படி, 160-200 கி.மீ/மணி வேகத்தில் இயக்கப்படும் பாதைகளில் 2030ம் ஆண்டுக்குள் அனைத்து லெவல்கிராஸிங்குகளும் மேம்பாலங்கள் அல்லது கீழ்ப்பாலங்களாக மாற்றப்படும்.