Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்வே வாரிய தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு

சென்னை: ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் சதீஷ் குமாரின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அவரது பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் 31ம் தேதி முடிவடைய இருந்தது. ஆனால், தற்போது 2025 செப்டம்பர் 1 முதல் மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நீட்டிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பணியாளர்கள் நியமனக் குழு இந்திய ரயில்வே மேலாண்மை சேவையைச் சேர்ந்த சதீஷ் குமாரை தற்போது உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், அல்லது அதற்கு முந்திய ஆணை வரைக்கும், மேலும் ஒரு ஆண்டு பதவியில் தொடர அனுமதித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

சதீஷ்குமார் கடந்த 2024 செப்டம்பர் 1 அன்று ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் சிஇஒ ஆக முதன்முறையாக நியமிக்கப்பட்டார். இவர் பதவியில் பொறுப்பேற்ற முதல் பட்டியல் சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷ் குமார் 1986ம் ஆண்டு இந்திய ரயில்வே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேவையைச் சேர்ந்தவர். அவர் 1988 மார்ச்சில் தனது சேவையைத் தொடங்கி, கடந்த 34 ஆண்டுகளாக பல முக்கியப் பொறுப்புகளை வகித்து, ரயில்வே துறையின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர் ஜான்சி, வாரணாசி, லக்னோ, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார். பனிமூட்டுள்ள காலங்களில் ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவதற்கான Fog Safe Device எனும் கண்டுபிடிப்பு, சதீஷ் குமாரின் முக்கியமான சாதனையாகும். இவ்வாற்றல் வாய்ந்த கண்டுபிடிப்பு, இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.